Yarl கதிர்

இணைய பத்திரிகை

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்- தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பு

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, பா.ஜ.க.-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது.

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று (சனிக்கிழமை) பதவியேற்றார்.

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதலமைச்சர் பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வந்தது.

இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியானதாகவே கருதப்பட்டது.

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை இன்று சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

ஆனால், மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பா.ஜ.க. – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று காலை பொறுப்பேற்றது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பட்னாஸ் மற்றும் அஜித் பவாருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் கடந்த 10 நாட்களாக அமுலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஆட்சியமைப்பதற்கு 145 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பா.ஜ.க.வின் 105 உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரசின் 54 உறுப்பினர்கள் இணைந்து தற்போது ஆட்சியமைத்துள்ளன.

ஒரே இரவில் இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது என அரசியல் ஆர்வலர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம் பா.ஜ.க.வை ஓரங்கட்ட நினைத்த காங்கிரசும் சிவசேனாவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!