Yarl கதிர்

இணைய பத்திரிகை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இந்திய அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

இந்த நிலையில் இதில் முதலாவதாக ரி-20 தொடருக்கான 15பேர் கொண்ட இந்தியா அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்த அணியிலிருந்து, ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் விலகியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கிண்ண தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி தவான், மகாராஷ்டிரா அணிக்கெதிரான போட்டியில் விளையாடும்போது காயத்திற்கு உள்ளாகினார்.

இந்த காயம் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரில் இருந்து நீக்கியதால், தேர்வுக்குழு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அவரை மீண்டும் அணியில் சேர்த்துள்ளது தேர்வுக் குழு.

கே.எல். ராகுலுடன் இணைந்து சஞ்சு சாம்சனுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், சிவம் டுபே, வொஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபக் சஹார், மொஹமட் ஷமி, புவனேஸ்வர் குமார், சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், 6ஆம் திகதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என அம்மாநில பொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 6ஆம் திகதி வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக, டிசம்பர் 11ஆம் திகதி நடைபெற இருக்கும் 3ஆவது மற்றும் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!