Yarl கதிர்

இணைய பத்திரிகை

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் இழுபறி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை இம்மாத இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக அது தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கடந்த ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஒன்பது பேர் அதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அதற்கான தேர்தலை நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நேற்று முன்தினம் சனிக்கிழமை கூடிய யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவை விண்ணப்பதாரிகளின் தகுதி, தராதரங்களை மதிப்பீடு செய்வதற்கும் துணைவேந்தர் தேர்தலை நடத்துவதற்கான திகதியைத் தீர்மானிப்பதற்காகவும் மூவரடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தது.

அந்த குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ள அதேவேளையில் எதிர்வரும் டிசம்பர் 28ஆம் திகதி துணைவேந்தர் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதனால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அநேகமாக எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதியளவில் இந்ந நியமனங்கள் வழங்கப்படலாமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் கலைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படலாமெனவும் பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!