Yarl கதிர்

இணைய பத்திரிகை

வடக்கு கிழக்கில் இருந்து ஏதிலியாவதா? – இளைஞர் படையை உருவாக்க வேண்டும் என்கிறார் சி.வி.

அரசாங்கக் கெடுபிடிகள் வேண்டுமென்றே நீடித்தால் வடக்கையும் கிழக்கையும் நாம் யாவரும் விட்டு ஏகும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற கேள்வி எழுவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே,  அரசியல் முன்னெடுப்புக்களுக்குச் சமாந்தரமாக வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர் படையை திரட்டி, கிராமம் ரீதியாக அவர்களின் அமைப்புக்களை உருவாக்கி, இளைஞர் அணிகள் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பல வேலைத் திட்டங்கள் அவசரமும் அவசியமானவையாகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பளையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிழக்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “இந்நாட்டில் குறிப்பாக வடக்கு பகுதியில் உலக நாடுகள் பலவற்றின் மறைமுக அனுசரணையுடன் அரங்கேறிய மாபெரும் இன அழிப்பு யுத்தத்தினால் இறந்தவர்கள் போக எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் நடைபிணங்களாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எமது பகுதிகளில் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இம்மக்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் யுத்தத்தின் பின்னராவது இம்மக்களுக்கான உதவிகள், நிவாரணங்கள், இழப்பீடுகள் என எதையும் வழங்காது தாம் புரிந்த யுத்தம் தர்ம யுத்தம் எனவும் யுத்தத்தில் அழிக்கப்பட்ட அனைவரும் விடுதலைப் புலி உறுப்பினர்களே எனவும் அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் பொது மக்கள் ஒருவர் கூட பாதிப்புக்குள்ளாக்கப்படவில்லை என்ற பாணியில் சர்வதேச அரங்குகளில் தம்மை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இம்மக்களின் துயர்களில் தாமும் கலந்துகொண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்க முன் வந்திருக்கின்ற எமது கடல் கடந்த உறவுகளுக்கு இம்மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம்.

இன்றைய நிலையில் எமது நாட்டின் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் தென்படக்கூடிய எமது எதிர்கால நெருக்கடிகளை நாம் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாட்டு நடப்புகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.

பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. எமது உள்ளுர் உற்பத்திகள் கூட பல மடங்கு விலையில் உள்ளுரில் விற்கப்படுகின்றன.

வட பகுதியின் முதற்தர விவசாய அறுவடையாகக் காணப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை 400 ரூபாயிற்கும் அதிகமாகிவிட்டது. மரக்கறி விலை, மீன் விலை, கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை என அனைத்துமே உச்சநிலைக்கு அதிகரித்துவிட்டது.

நாம் தொடர்ந்து கண்மூடி மௌனிகளாக இருப்போமாயின் எஞ்சியுள்ள எமது சின்னஞ் சிறுசுகளையும் இழக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம். பஞ்சம், பட்டினி நிலை ஏற்படுவதை விட எமது இளம் சமுதாயம் பிற நாடுகளை நோக்கி ஓடும் நிலை நிலைத்துவிட்டால் தமிழர்களாகிய நாங்கள் யாருக்காகப் போராட வேண்டும்?

இன்று தெற்கில் இருந்து அரசாங்கம் பெருவாரியாக சிங்கள மக்களை எமது பல்கலைக்கழகங்களுக்கும் திணைக்களங்களுக்கும் அனுப்பும் நிலை ஏற்பட்டமைக்கு காரணம் எமது இளம் சமுதாயம் எம்மை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால்தான் ஏற்பட்டது என்றால் என் கூற்று பிழையாகுமா?

அரச நடவடிக்கைகளுக்குப் பயந்தே தாம் போவதாகச் சிலர் கூறுவார்கள். அப்படியானால் அரசாங்கக் கெடுபிடிகள் வேண்டுமென்றே நீடித்தால் எமது வடக்கையும் கிழக்கையும் நாம் யாவரும் விட்டு ஏகும் நிலை ஏற்படுமா? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இப்போது உதயமாகியுள்ளது.

எனவே எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்குச் சமாந்தரமாக இப்பகுதியில் உள்ள இளைஞர் படை அணியினரை ஒன்று திரட்டி, கிராமம் கிராமமாக அவர்களின் அமைப்புக்களை உருவாக்கி, இளைஞர் அணிகள் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பலவேலைத்திட்டங்கள் அவசரமும் அவசியமானவையாகியுள்ளன.

விடயங்களை இலகுவில் விளங்கிக்கொள்வதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இளைஞர் அணிகளே ஏற்ற மன மற்றும் உடல் வலிமைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!